இனி என் முறை
(இந்தக் கதையை தனியாகவும் படிக்கலாம் அல்லது 'இதுதான் காதல் என்பதா' வின் தொடர்ச்சியாகவும் படிக்கலாம்)
கண்விழித்தபோது அறையில் வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. ஏழுமணி இருக்குமா? இனிமேல் தூக்கம் வராது. பக்கத்தில் படுத்திருக்கும் ராஜீவைப்பார்த்தேன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். போர்வையைத் தாண்டி அவன் சட்டையில்லாத தேகம் தெரிந்தது. அவனைக் கட்டிக் கொண்டு இன்னும் கொஞ்சம் நேரம் படுத்திருக்கலாம் என்று தோன்றியது. வேண்டாம். அவன் விழித்துக்கொள்வான், பிறகு பகல்பொழுது வீணாகிவிடும். சட்டென்று எழுந்து மேஜையில் இருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தேன். 08:42 ஜூன் 22 என்று ஒளிர்ந்தது. இந்த நாளுக்காகத்தான் ஒருவாரமாகக் காத்துக்கொண்டிருந்தேன். அவனுக்குக் கொடுப்பதற்காக ரகசியமாக வாங்கிவைத்திருந்த பரிசு நினைவுக்கு வந்ததது. அதன் மேல் எழுதவேண்டிய க்ரீடிங் வாசகம் பற்றி யோசிக்கவேண்டும். இன்றோடு ராஜீவ் எனக்கு ப்ரபோஸ் செய்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அவன் முதன் முதலாக ப்ரபோஸ் செய்தது, அப்பொழுது நான் மறுத்தது, பிறகு ஒருமாதம் அவன் முகத்தைக்கூட பார்க்காமல் இருந்தது, லதா அவனுக்காக என்னோடு வந்து பேசியது, பல கண்டிஷன்களோடு அவன் காதலை கடைசியாக ஒப்புக்கொண்டது, அவனோடு சேர்ந்து சுற்றியது எல்லாம் நினைவுக்கு வந்தது.
முகத்தை கழுவிக்கொண்டு சமையல் அறைக்குப் போனேன். என்ன ப்ரேக்ஃபஸ்ட் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே அலமாரியை நோட்டம் விட்டேன். அலமாரியில் எங்கள் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் இருந்தது. அதில் அவன் என் தோள்மீது கைபோட்டபடி சிரித்துக்கொண்டிருந்தான். அவன் கைபோட்டிருக்கும் விதத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. அப்பொழுதுதான் அவன் என்னை இவ்வளவு நெருக்கத்தில் தொடுகிறான் என்று நினைகிறேன். ஒருமுறை அவனோடு டூவீலரில் சென்றபோது அவன்மேல் பட்டதுண்டு. மற்றபடி நாங்கள் ஒரு அடி தள்ளி நின்றுதான் காதலித்தோம் என்று சொல்லவேண்டும். அதுவும் என்னுடைய கண்டிஷன்களில் ஒன்று. அப்போது என்னை டூவீலரில் அழைத்துச் செல்ல எப்படி கெஞ்சினான்?
ஆனால் அந்த நாளை என்னால் மறக்கவேமுடியாது. அது சரியாக ஒருவருடம் முன்பு இதேநாள். அவன்தான் அந்த நாளை நினைவு படுத்தினான். அதுவும் எப்படி. ஒரு பெரிய அழகான க்ரீட்டிங்கார்டோடு. நான் அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அன்று எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியில்தான் அன்று அவனோடு டூவீலரில் போகக்கூட ஒப்புக்கொண்டேன். முதன் முதலில் அப்பா தவிற மற்றொரு ஆண்பின் அமர்ந்து பயணம் செய்த அனுபவம். ஒரு ஹோடலுக்கு கூட்டி சென்றான். 3 ஷ்டாரா 5 ஷ்டாரா தெரியவில்லை. அதற்கு முன் நான் அவ்வளவு பெரிய ஹோட்டலுக்குப் போனதில்லை. எங்களுக்கு மட்டும் தனியாக ஒரு இருக்கை இருந்தது. ஏற்கனவே பதிவு செய்திருந்தான் என்று நினைக்கிறேன். வெய்டர்கள் எவ்வளவு நேர்த்தியாக உடைஅணிந்திருந்தார்கள், எவ்வளவு பணிவாக பரிமாறினார்கள். அந்த அறையில் மங்கலான வெளிச்சம் பரவியிருந்தது பின்னணியில் மெல்லிய இசையை ஓடிக்கொண்டிருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் மறுபடி ஒருமுறை அவன் தன் காதலைச் சொன்னான். ஒரு சிறிய கிஃப்ட் ராப் செய்த பெட்டியை நீட்டினான். அதற்குள் ஒற்றைக்கல் வைத்த அழகான தோடு ஒன்று இருந்தது. எனக்கு அழவேண்டும் போல் இருந்தது ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. அந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ளாதது பற்றி எனக்கே அப்போது வெட்கமாக இருந்தது. ஆனால் இந்தமுறை அப்படி இல்லை. அவனுக்கு முன்பாக நான்தான் வாழ்த்துச் சொல்லப்போகிறேன். ஆனால் இவன் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லையே? பார்க்கலாம்.
ப்ரேக்ஃபஸ்டுக்கு ப்ரெட் ஆம்லெட் மட்டும் ரெடி செய்துவிட்டு வெழியே வந்தேன். மதியம் எங்காவது நல்ல ரெஸ்டாரன்ட் செல்லலாம், அங்கே வைத்து பரிசைக் கொடுக்கலாம் என்று திட்டமிட்டேன். ராஜீவ் இன்னும் எழுந்திருக்க வில்லை. குளித்துவிட்டு வந்து அவனுக்கு பிடித்த மெரூன் நிற உடையை அணிந்து கொண்டேன். மறுபடி படுக்கை அறையை எட்டிப்பார்த்தேன். இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். "ராஜீவ்... எழுந்திரிபா .. மணி பத்து ஆகுது" என்றேன். "ம்ம்ம்..." என்றுமட்டும் பதில் வந்தது. சரி வரட்டும் என்று காத்திருந்தேன். அவனுக்கு வாங்கி வைத்திருந்த பரிசை ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். ரே-பான் க்லாஸ். டூவீலரில் போகும்போது போட்டுக்கொள்ள ஆகும். இதை வாங்குவதற்கு எங்கெல்லாம் அலைந்தேன்? எத்தனை கடை தனியாக ஏறி இறங்கினேன். அதற்கெல்லாம் பலன் இல்லாமல் இல்லை. இதை கொடுத்து அவன் சந்தோசப்படுவதை இன்று பார்க்கப்போகிறேன்.
அவன் எழுந்து வந்தபோது பதினோரு மணியாகிவிட்டது. என்ன செய்கிறான் என்று புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் கவனித்தேன். அவன் எப்போதும் போல பாத்ரூம் சென்று பல்துலக்கிவிட்டு வந்தான். சமையலறைக்குச் சென்று அவனுக்கு வைத்திருந்த ப்ரெட் ஆம்லெட்டை எடுதுக்கொண்டு மற்றொரு கையில் பேப்பரை எடுதுக்கொண்டு என் எதிரில் வந்து அமர்ந்தான். பேப்பரை அகலமாக விரித்து முகத்தை மறைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான். அடப்பாவி.. என்ன இவன் என் முகத்தைக்கூட பார்க்கவில்லை. நடிக்கிறானா? ஆம் அப்படித்தான் இருக்கும். 'நடித்தது போதும் என் அன்புக்கணவா ! இந்த முறை நான்தான் உனக்கு ஆச்சரியம் கொடுக்கப்போகிறேன்.'
ஆனால் என்னால் அதிக நேரம் பொறுமையாக இருக்க முடியவில்லை.
"ராஜீவ்... லன்ச்சுக்கு எங்க போகலாம்?" என்றேன்.
"எங்கேயும் போகவேண்டாம் வீட்டிலயே சாப்பிடலாம்" என்றான் பேப்பரைக்கூட விலகாமல்.
'அடப்பாவி என் ப்லானில் மண்ணள்ளி போட்டுடாதேடா'. "ப்லீஸ் பா இன்னைக்கு வெழியே எங்கேயாவது போலாமே?" என்றேன் கெஞ்சும் குரலில்.
பேப்பரை விலக்கிவிட்டு பார்த்தான். "ஏன் மா ? சமைக்க மூட் இல்லையா. அப்ப ஏதாவது ஆடர் பண்ணி வீட்டுக்கு வரவழைக்கலாம். இன்னைக்கு டீவியில் ஃபுட்பால் மேட்ச் இருக்கு" என்றுவிட்டு மறுபடியும் போப்பரில் மூழ்கிவிட்டான்.
'இவன் என்ன உண்மையிலேயே மறந்து விட்டான? இல்லை என்னை சோதனை செய்கிறானா?' "எனக்கு வெழியே எங்கேயாவது போகணும் நீ வரப்போகிறாய இல்லையா?" என்றேன் பொய்யான கோபத்தோடு.
"இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? இன்னைக்கு ஏதாவது முக்கியமான நாளா?" மீண்டும் என்னை நிமிர்ந்து பார்த்தான்.
'அப்பாடி... இப்பவாவது இந்த மரமண்டைக்கு புரிந்ததே'
என் முகத்தில் இருக்கும் ஆர்வத்தை கவனித்து விட்டான். "ஓ.. நம்ம கல்யாண நாளா? ... இல்லையே. இது உன்னோட பிறந்த நாள் கூட இல்லையே ... அப்பரம் என்ன?"
சிறிது நேரம் யோசிப்பதுபோல் ஒற்றைவிரலை தாடையில் வைத்துத் தட்டினான். பிறகு "சரி நான் தோத்துட்டேன் .. நீயேசொல்லு" என்றான்.
'சொல்கிறேன் என் காதலா, சொல்கிறேன். நான் சொன்னவுடன் ஆச்சரியதில் உன் கண்கள் விரிவதை படம் எடுக்கவேண்டும் எனக்கு. சந்தோசத்தில் என்னை வந்து கட்டிக்கொள்ளப் போகிறாய். பிறகு நான் சொல்லும் இடத்துக்கெல்லாம் என்னை கையிலேயே தூக்கிக்கொண்டு செல்வாய்'.
"நான்... நான் ... உன்னை காதலிக்கிறேன்னு நினைக்கிறேன்... என்வாழ்கையில் கடைசிவரை நீ என்கூட வரணும்னு ஆசைப்படறேன்..." அவன் அன்று சொன்ன வார்தைகளை அவனுக்கே சொன்னேன்.
"ஓ... நான் உனக்கு ப்ரபோஸ் பண்ண நாள் இல்ல? ஆனா சாரிடா. இன்னைக்கு மாட்ச் இருக்கு அதனால இன்னொரு நாள் போலாம். சரியா? ... பை த வே. ஹேப்பி ஆனிவர்சரி" என்று சொல்லிவிட்டு மீண்டும் பேப்பரில் ஆழ்ந்தான்.
2 comments:
Hi,
Nice one. But guys should understand the girl's feeling.
yeah ... that was the intent of the story :-)
Post a Comment