ரயில் ஸ்னேகம்
~~~~~~~~~~~~~~
அவன்~~~~~~~~~~~~~~
~~~~~~
இரவு பன்னிரண்டு மணிக்கு ரயில் நிலையத்தில் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் இருந்தது. நான் போகவேண்டிய ரயில் அரைமணி நேரம் தாமதமாக வந்துசேர்ந்தது. இனிமேல் என் பர்த்துக்கு சென்று நான்கு மணிநேரம் தூங்கலாம் என்று எண்ணிய படியே என் கோச்சை நோக்கி ஓடினேன். கோச் கதவருகில் கும்பலாக ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். 'உள்ள எடம் இல்ல' என்றவனிடம் எதுவும் சொல்லாமல் என் பர்த்தை தேடி நடந்தேன். நடந்தேன் என்று சொல்ல முடியாது கீழே படுத்திருக்கும் ஆட்களின் மேல் படாமல் இருக்க காலை அகட்டிவைத்து தாவித்தாவிச் சென்றேன்.
கோச்சுக்குள் விளக்குகள் அணைக்கப்பட்டு கொஞ்சம் இருட்டாக இருந்தது. என் செல்போன் வெளிச்சத்தின் உதவியோடு என் பர்த்தை கண்டுபித்தால் அங்கு ஏற்கனவே ஒரு பெண் படுத்திருந்தாள். எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. 'ஒரு வேளை தவறான கோச்சில் ஏறிவிட்டேனோ? அல்லது டிக்கெட் வேறு நாளுக்கு பதிவுசெய்ததோ ? சற்று தயங்கியபடியே அவளை எழுப்பி பர்த் எண்ணை சரிபார்க்கச் சொன்னேன். அவள் அவசரமாக எழுந்து 'இது உங்களோட சீட்தான்' என்றாள். இவள் அன்ரிசர்வ்டு டிக்கெட் போலிருக்கிறது. எழுந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் ஒருபக்கமாக அமர்ந்து கொண்டேன். ஆனால் அவள் அப்படியே அமர்ந்திருந்தாள். சரி தூக்க கலக்கத்தில் இருக்கிறாள் என்று இன்னும் சற்று நேரம் காத்திருந்தேன். ஊஹும் ... அவள் எழுந்திருப்பது போல் தெரியவில்லை. கோச் முழுக்க ஆண்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் அவள் எங்கு எழுந்து செல்வது என்று யோசிக்கிறாள் என்று நினைத்தேன். என்னால் அவளை எழுந்து போகச் சொல்ல முடியாது. இன்று நான் தூங்கின மாதிரி தான் என்று நினைத்துக்கொண்டு ஒருபக்கம் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் எனக்கு முதுகு வலிக்க ஆரம்பித்தது. நான் ஏன் இப்படி அவளை எழுந்து போகச் சொல்லக்கூட தைரியம் இல்லாதவனாக இருக்கிறேன் என்று என்னையே நொந்துகொண்டேன். இது ஒன்றும் பயம் இல்லை ஒரு படச்சாதாபம்தான் என்று என் மனதை சமாதானப் படுத்திக்கொண்டு கண்களை மூடி தூங்க முயற்சித்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை அவள் என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் சீட் நுனியில் அசவுகரியமாக அமர்ந்திருந்தாள். எனக்கு நான்கு மணிநேரப் பயணம்தான் ஆனால் அவள் எங்கிருந்து வருகிறாளோ பாவம். 'வசதியாக உட்கார்ந்துகொள்' என்றேன் புன்னகையை வரவழைத்துக்கொண்டு. அவள் சற்று தயக்கத்தோடு பின் நகர்ந்து அமர்ந்துகொண்டாள்.
எதற்காக இந்த கரிசனம்? அவள் ஒரு இளம் பெண் என்பதாலா? இதுவே ஒரு ஆணாகவோ அல்லது வயதான பெண்மணியாகவோ இருந்தால் இதைச் செய்திருப்பேனா? தெரியவில்லை. அவள் இளம் பெண் என்பதால் எனக்கென்ன லாபம். இந்த பயணம் முடிந்ததும் அவள் என்னை மறந்து போகப் போகிறாள். குறைந்த பட்சம் என் பெயர்கூட அவளுக்குத் தெரியப்போவது இல்லை. அவளை மறுபடி சந்திக்கும் வாய்ப்பு லட்சத்தில் ஒன்றாக இருக்கும். அப்படியே சந்தித்தாலும் கண்டிப்பாக ஒருவரை ஒருவர் மறந்திருப்போம் இந்த கதை மறுபடி முதலில் இருந்துதான் துவங்கும். இப்போது அதைப்பற்றி யோசித்து ஒரு பயனும் இல்லை. இன்று இரவு எனக்கு தூக்கம் கிடையாது, முதுகு வலியோடு பயணம் செய்யப்போகிறேன் என்பதுதான் நிதர்சம். இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போதே சிறிது நேரம் துங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். ஒரு ஹார்ன் சத்தத்தோடு ரயில் நின்றதில் விழித்துக்கொண்டேன். பக்கத்தில் அவள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். யார் கண்டது. ஒருவேலை இந்த உதவிக்காக அவள் எனக்கு நன்றி சொல்லலாம். அந்த உரையாடல் மேலும் வளர்ந்து ஒருவரைப்பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளலாம். எங்களுக்கிடையில் பொதுவான விசயங்கள் நிறைய இருப்பதைக்கண்டு அவள் தன் மெயில் ஐடி கொடுத்து மறக்காமல் மெயில் அனுப்பு என்று சொல்லாலாம். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் அதீத கற்பனையாகப் பட்டது. கற்பனைகளை தள்ளி வைத்துவிட்டு மறுபடி நான் கண்களைமூடி தூங்க முயற்சித்தேன்.
இப்படியே நான் தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவில் ஊசலாடிக்கொண்டிருக்கும் போது இறங்கும் இடமே வந்துவிட்டது. இவள் என்ன, ஒரு நன்றி கூட சொல்ல வில்லை. ஒருவேலை கடைசியாக சொல்லலாம் என்று நினைத்திருப்பாள். நான் இங்கேயே இறங்கப்போகிறேன் என்று இவளுக்கு எப்படித் தெரியும்? எனக்கு நன்றி சொல்லாததற்காக வருத்தப்படப் போகிறாள். என் பெயரை அறிந்து கொள்வதற்காக ரயில் பெட்டியில் ஒட்டியிருக்கும் பெயர்பட்டியலை அவள் தேடுவது போல் கற்பனை செய்துகொண்டே ரயிலை விட்டு இறங்கி ஆட்டோவைத் தேடி நடந்தேன்.
அவள்
~~~~~~
இதுதான் என்வாழ்க்கையிலேயே மோசமான நாள் என்று நினைக்கிறேன். காலையில் மேனேஜரிடம் இருந்து போன், லீவை கேன்சல் செய்துவிட்டு ஆஃபிசுக்கு வரச்சொல்லி. நான் செய்து கொடுத்த அசைன்மெட்டில் எதோ பிரச்சினையாம். பல நாட்களுக்கு பிறகு லீவ் போட்டுவிட்டு ஊரில் அப்பா அம்மாவோடு இருக்க வந்தால் இப்படி ஒரு பிரச்சினை. சரி திரும்பப் போக டிக்கெட் வாங்கினால் அதுவும் வெய்ட்டிங் லிஸ்ட். ஸ்டேசனுக்கு வந்தால் உட்காரக்கூட இடம் இல்லை. ரயில் வேறு அரைமணி நேரம் தாமதம். நிறைய நேரம் நின்றுகொண்டிருந்ததில் கால்வலி. கடவுளே என்னை உருப்படியாக ஊருக்கு கொண்டு போய் சேர் என்று வேண்டிக்கொண்டேன்.
ஒருவழியாக ரயில் வந்து சேர்ந்தது. ஜென்ரல் கம்பார்ட்மென்ட் முழுக்க கூட்டம். என்னால் சத்தியமாக ஏறியிருக்க முடியாது. அப்பா கொடுத்த ஐடியா படி கொஞ்சம் காலியாக வந்த ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டில் ஏறி காலியாக இருந்த ஒரு சைட் பர்த்தில் உட்கார்ந்துகொண்டேன். கடவுளுக்கு நான் சொன்னது கேட்டுவிட்டது என்று நினைக்கிறேன். ரயில் கிளம்பி சிறிதுநேரம் ஆகியும் அந்த பர்த்துக்கு யாரும் வரவில்லை. அதிலேயே படுத்து ஆஃபிஸ் அசைன்மெட் பற்றி யோசித்தேன். சிறிது நேரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டேன். திடீர் என்று யாரோ ஒருவன் என்னை எழுப்பி செல்போன் வெளிச்சத்தை என்முகத்திற்கு நேராக அடித்தான், விவஸ்தை கெட்டவன். என் பர்த் நம்பர் என்ன என்று கேட்டான். கையில் டிக்கெட் வைத்திருந்தான். ஒருவேலை பர்த்துக்கு சொந்தக்காரனோ? இது அவனுடையதுதான் என்று சொல்லிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன் அதற்குள் அவனும் என் பக்கதில் அமர்ந்துகொண்டான். அவன் பார்வைவேறு சரியில்லை பேசாமல் எழுந்து எங்காவது போய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எங்கே போவது? கம்பார்ட்மென்ட் முழுக்க தடிதடியாக ஆட்கள் நின்றிருந்தார்கள். அவன் வேறு திரும்பி திரும்பி என்னையே பார்துக்கொண்டிருந்தான். அடுத்த ஸ்டேசனில் இறங்கி ஆட்டே பிடித்து வீட்டுக்கு போய்விடலாமா? இந்த நேரத்தில் ஆட்டோ எங்கே கிடைக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவன் என்னிடம், வசதியா உட்கார்ந்துகொள்ள சொல்லிவிட்டு இளித்தான். எழுந்துபோ என்று திட்டுபவர்களைக்கூட நம்பலாம் இப்படி வலிய வந்து உதவி செய்பவர்களை நம்ப முடியாது. இதுதான் சாக்கு என்று மேலே கைவைத்து விடுவானொ என்று பயமாக இருந்தது. சுற்றி இவ்வளவு கூட்டம் இருக்கும்போது அவ்வளவு தைரியம் அவனுக்கு வராது என்ற நம்பிக்கையோடு நன்றாக அமர்ந்து கொண்டேன். கடவுளே, போயும் போயும் இவனிடம் எல்லாம் என்னை உதவி கேட்க வைக்கிறாயே. இருட்டாகவேறு இருந்தது இவன் தூங்குகிறேன் போர்வழி என்று மேலே சாய்ந்தால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு சேஃப்டி பின் எடுத்து கையில் வைதுக்கொள்ளலாம? அவனை சேஃப்டி பின்னால் குத்த அவன் கத்துவதாகக் கற்பனை செய்தேன், சிரிப்புதான் வந்தது. சரி என்னதான் நடக்கும் பார்த்துக்கொள்ளலாம். அவன் மறுபடி என்பக்கம் திரும்பிப்பார்த்தான் நான் கண்களை மூடி தூங்குவது போல் நடித்தேன். அப்படியே சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன்.
நான் விழித்துப் பார்த்த போது சிறிது விடிந்திருந்தது. அவன் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். பாவம் நல்லவன் போல் தான் இருக்கிறான். நான் தான் தேவையில்லாமல் பயந்தேன். ஒரு நன்றியாவது சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். நன்றி சொல்லப்போக மேலும் பேச்சு கொடுப்பானோ? போகும்போது ஒரே ஆட்டேவில் போகலாம் என்று பக்கதில் வந்து உட்கார்ந்து விடுவானோ என்று பயமாக இருந்தது. இப்போதைக்கு அமைதியாக இருப்பதே நல்லது. நல்லவேலையாக அவன் ஒரு ஸ்டேசன் முன்பாகவே இறங்கிக்கொண்டான். பர்த் காலியானதில் நன்றாக படுத்துக்கொண்டு மறுபடியும் அசைன்மென்ட் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
4 comments:
too good
cool story man.. I enjoyed this one...esp. the imaginary part... you really hit the groove of feminine (south indian) thinking. Suspicion - Compassion - Relief.
I think the story enunciated the said points by connecting those dots beautifully.
Lack of surprise element is totally dominated by simplicity of narration, specifically, it was a smooth ride, it didnt have any bumpy or burrs!
-ramki
I read the story. The plot is good.
In your storyline, the male portrayed as a "good, gentle man". But, the female is pictured as someone who doubts the intentions of the male. I think you have characterized to make the story interesting & "a bit humourous" (by comparing what the girl thinks against those thought by the guy)...
Though it is the most natural thing to have happened from the girl's side, the guy need not be a gentle man in most cases. He might have tried to talk a lot with the girl or he would tried to "impress" the girl...
Anyway, it is good plot and interesting to read.
One major problem is the tamil fonts....Very tough to read...
Keep writing ;)
-bals
Hi Bals,
Thanks for bringing this point. It was not my intent to say that all guys are like him and all (south Indian :-) girls are like her. This story evolved as an answer to a question occurred to me on my previous travel (why didn’t she thank me?). The second part of the story is imaginary and I could be totally wrong about the girl. I did some alteration on the first part too in order to make it interesting.
Post a Comment