Tuesday, February 28, 2006

கதை - 1

நந்து
~~~~~
உங்களுக்கு டெலிபதியில் நம்பிக்கை உண்டா? உங்களுக்கு எப்படியோ, எனக்கு அதில் எல்லாம் சுத்தமாக நம்பிக்கை இருந்தது கிடையாது. அரசு நந்துவைப்பற்றி முதன் முதலாக என்னிடம் சொல்கிறவரை. உங்களுக்குப் புரிகிற மாதிரி விளக்கமாவே சொல்றேன். நீங்கள் எங்கேயாவது நின்று வேடிக்கைப் பார்துக்கொண்டிருக்கும்போது யாரோ உங்களை கவனிப்பதுபோல் தோன்றி திரும்பிப் பார்த்ததுண்டா? அப்போது யாராவது உங்களை நிஜமாகவே கவனித்துக்கொண்டு இருந்திருக்கிறார்களா? ஆமாம் தானே. எனக்கும் அதுபோல நிறைய நடந்திருக்கிறது. அதெல்லாம் ஏதோ coincidence என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேன். ஆனால் அது நமக்குள் இருக்கிற முழுமையடையாத ஒரு சக்தி, அது சிலரிடம் அதிகமா இருக்கும் என்பது அரசுவின் வாதம். இப்போது சிலபேர் காது மடல்களை அசைத்து வேடிக்கை காட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் எல்லோராலும் அதை செய்துவிட முடியாது. அதற்கு அறிவியல் தரும் விளக்கம் என்னவென்றால் மனிதர்களுக்கு காதின் அசைவைக் கட்டுப்படுத்தும் தசைகள் பொதுவாக கிடையாது ஆனால் சிலருக்கு அபூர்வமாக அந்த தசைகள் (நம் நான்குகால் மூதாதையர்களின் மிச்சங்களாக) சிறிதளவு வளர்ச்சிபெற்றிருக்கும் என்பதுதான். அவர்களால்தான் அவ்வாறு காதுமடல்களை தன்னிச்சையாக அசைக்க முடிகிறது. அதுபோலத்தான் அரசு சொல்லும் டெலிபதி சங்கதியும் என்று வைத்துக்கொள்ளுங்களே.


பார்த்தீர்களா நான்பாட்டுக்கு எங்களைப்பற்றி அறிமுகப்படுத்தாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நான், அரசு, நந்து மூன்றுபேரும் ஒரே கல்லூரியில் படித்தோம். முதலில் நந்து (என்கிற நந்தகோபால்) பற்றி சொல்கிறேன். சிலரைப் பார்க்கும் போது பார்த்த உடனே அவன் ஒரு படிப்பாளி என்று தோன்றும் இல்லையா அப்படிப்பட்ட ஒருவன் தான் நந்து. படியவாரின தலை, எப்போதும் சிரித்த முகம் இவைதான் அவன் அடையாளங்கள். அவனைப் பார்க்க வேண்டும் என்றால் லைப்ரெரிக்குப் போகவேண்டும். அங்கே ஏதாவது ஒரு மூலையில் யாருமே அதுவரை எடுத்திராத ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்துக்கொண்டு இருப்பான். இல்லாவிட்டால் லேபில் அவன் புதிதாக அமைத்த சர்க்யூட்டை ஏதாவது ப்ரொஃபசருக்கோ அல்லது மாணவர்களுக்கோ விளக்கிக் கொண்டிருப்பான். படிப்பு மட்டும் அல்ல விளையாட்டிலும் அவனை அடித்துக்கொள்ள முடியாது. அவன் பாட சம்பந்தமாக படித்து மட்டும் நான் பார்த்தது இல்லை. ஆனாலும் ஒரு முறை தவறாமல் அவன் முதல் மார்க் வாங்கும் அதிசயம் எப்படி என்று பலமுறை கேட்க நினைத்து கேட்காமல் விட்டுவிட்டேன். கேட்டால் மட்டும் என்ன சொல்லிவிடப்போகிறான். ஒரு புன்னகை. நாங்கள் கேட்கும் முக்கால்வாசி கேள்விகளுக்கு அது தான் அவனின் அதிகபட்ச பதில். அவனைப்பொருத்தவரை அவை எல்லாம் ட்ரிவியல் அல்லது அப்படித்தான் அவன் எங்களை எண்ணவைக்கிறான். அதற்காக அவன் ஒரு கர்வம் பிடித்தவன் என்று எண்ணிவிடாதீர்கள். பழகுவதற்கும் ரொம்ப இனிமையானவன் தான். ஆனால் என்ன, அவனிடம் பேச நமக்குதான் ஞானம் பற்றாது. அவனிடம் பாடசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் என்று கேட்டுப்பாருங்கள், ஒரு class topper என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவ்வளவு பொருமையாக சொல்லிக் கொடுப்பான். பாட சம்பந்தமான விசயங்கள் அவனுக்கு படிப்பதற்கு முன்பாகவே தெரிந்துவிடுகிறது. நமக்கு பிறந்த உடனேயே பசிக்கு அழத்தெரிகிறது அல்லவா அதுபோல. எல்லாவற்றையும் அவன் கற்றுக்கொண்டுதான் பிறந்தானோ என்று தோன்றும். அவன் படிப்பது கூட அவனுக்கு தெரிந்த விசயங்களைச் சரிபார்க்கத்தான் என்று நினைத்திருக்கிறேன்.

அரசு அவனுக்கு நேர் எதிர். பாதி நாள் வகுப்புக்கு வரமாட்டான். பரிட்சைக்கு முன்தினம் மட்டும் மும்முரமாக முக்கியமான கேள்விகளைவைத்து படித்துக்கொண்டிருப்பான். படித்து மனதில் வைத்துக்கொள்ள முடியாதவற்றை எழுதி பாகெட்டுக்குள் வைத்துக்கொள்வான். அவன் படித்துவைத்த விடைகளைவிட பாக்கெட்டில் இருக்கும் விடைகள் பத்துமடங்கு அதிகம் என்பது ஒரு கூடுதல் புள்ளிவிபரம். அப்படி சிரமப்பட்டு படித்த ஒன்றிரண்டு பதில்களும் பரிட்சை அறைக்குள் வரமறுத்து வெளியேயே நின்று மறியல் செய்யும். ஆக, அவன் பரிட்சையில் வாங்கும் மதிப்பெண் அன்று வரும் பார்வையாளரின் சாமர்த்தியத்தை மட்டுமே சார்ந்திருக்கும்.

இப்படிப்பட்ட அரசுவும் அப்படிப்பட்ட நந்துவும் நண்பர்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் என்ன நான் கூட நம்பியிருக்க மாட்டேன் இந்த கல்லூரியில் படித்திருக்காவிட்டால். அரசுவுக்கும் நந்துவுக்கும் நெருக்கம் ஆனது cricket மூலமாதான். ஒரு LBW சண்டையில்தான் அவர்கள் நட்பு ஆரம்பம் ஆனது. அதற்குப் பிறகு அவர்கள் பிரிக்க முடியாதபடி நண்பர்கள் ஆகிவிட்டார்கள். வெறும் நண்பர்கள் என்று சொல்லக்கூடாது அந்த உயிர் நண்பர்கள் என்பார்களே அது போல. சினிமா, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் அவர்கள் சேர்ந்துதான் இருப்பார்கள். அவர்கள் பிரிந்து இருக்கும் ஒரே ஒரு இடம் வகுப்பறை. நந்து முதல் பென்ச், நானும் அரசுவும் கடைசி பென்ச். எனக்கும் அரசுவுக்கும் உள்ள பிணைப்பு 'படிப்பில்தான்' என்று நீங்கள் ஏற்கனவே யூகித்திருப்பீர்கள் அது சரிதான். அரசு நந்துவுடன் சேர்ந்தபின் படிப்பாளி ஆகிவிடுவான் என்று நினைத்தேன் ஆனால் அப்படி ஒரு விபரீதமும் நிகழவில்லை. நந்து அவனை சுயமாக பரிட்சையில் எழுதவைக்க எவ்வளவோ முயற்சி செய்தான். அவனுக்கு எவ்வளவோ பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான் ஆனால் அவைஎல்லாம் விழலுக்கிறைத்த நீராகிப்போனதில் அந்த முயற்சியை இருவரும் கைவிட்டு விட்டார்கள்.

அரசுவுக்கு படிப்பு தான் வராதே ஒழிய மற்ற எல்லாம் நன்றாக வரும். அவன் பாடி நீங்கள் கேட்டதுண்டா? எங்கள் college culturals வந்தீர்கள் என்றால் அவன் பாடுவதையோ அல்லது நடனம் ஆடுவதையோ கண்டிப்பாக பார்க்கலாம். அப்படியே அவனோடு கூடப்பாடும் எங்கள் கல்லூரி ப்யூட்டி குயின்(ல்) பிரதிபாவையும் நீங்கள் பார்க்கலாம். ஒரு கணக்கொடுப்பின் படி எங்கள் கல்லூரியில் படித்ததிலேயே அதிகப் படியான ஒருதலை காதலர்கள் பட்டியல் கொண்ட பெண் அவள்தான். அவளுக்கும் அரசுவுக்கும் காதல் என்று கல்லூரி முழுக்க கிசு கிசு உண்டு ஆனால் அதை அரசுவோ, பிரதிபாவோ ஒப்புக்கொண்டது கிடையாது.

சரி சரி. நான் சொல்ல வந்த விசயத்துக்கு வருகிறேன். நானும் அரசுவும் கடைசி பென்ச்சில் அமர்ந்திருப்போம் என்று சொன்னேன் அல்லவா? அப்படி ஒரு நாள் அமர்ந்திருக்கும்போது அவன் என்னைக்கூப்பிட்டு இப்பொழுது கவனி என்று சொன்னான் சொல்லிவிட்டு முதல் பென்ச்சில் இருக்கும் நந்துவை உற்றுப் பார்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் நந்து அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்தான். அப்போதுதான் முதன் முதலில் நந்துவிற்கு அந்த அபூர்வ சக்தி இருப்பதாக அரசு என்னிடம் சொன்னான். நான் அதற்கு முதலில் சொன்ன விளக்கம் அரசு பின்னால் இருப்பது நந்துவுக்கு தெரியும் என்றும் அவன் அரசுவை எதேச்சையாக பார்த்திருக்கலாம் என்பதுதான். அரசு ஒருமுறை என்னையும் அது போல செய்து பார்க்கச் சொன்னான். நான் பார்த்தபோதும் நந்து எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது ஆனாலும் நான் அப்போது அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. பிறகு பல சந்தர்ப்பங்களில் அரசு அதை நிரூபித்துக் காட்டிய பிறகு எனக்கும் அவன் சொல்வதில் நம்பிக்கை வர ஆரம்பித்தது. அதுமட்டும் இல்லாமல் நந்துவைப்பற்றி ஏற்கனவே பல ஆச்சர்யங்கள் எனக்கு இருந்ததால் இதை நம்புவது எனக்குக் கடினமாக இல்லை. நந்துவுக்கு இருக்கும் இந்த சக்தி பற்றி மெல்ல மெல்ல கல்லூரி முழுவதும் தெரிய ஆரம்பித்தது. பலர் இதை நம்பாவிட்டாலும் இதன்மூலம் நந்து எங்கள் கல்லூரியில் மேலும் பிரபலம் ஆனான் என்பது தான் உண்மை.

இதெல்லாம் நடந்து பலவருடங்கள் ஆகிவிட்டன. கல்லூரி படிப்பு முடிந்து ஆளுக்கு ஒரு மூலையில், அவன் அவன் குடும்பம், வேலை என்று செட்டில் ஆகிவிட்டோம். நின்று யோசிக்கக் கூட நேரம் இல்லாமல் காலத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு நாளில்தான் நான் மீண்டும் அரசுவை சந்தித்தேன். ஒரு பலசரக்கு கடையில் இந்த மாதம் வீட்டுக்கு தேவையான பொருட்களை தள்ளு வண்டியில் சேகரித்துக்கொண்டிருக்கும் போது தான் அவனும் பிரதிபாவும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். (சொல்ல மறந்துவிட்டேனே, எல்லோரும் எதிர்பார்த்து போலவே அவன் பிரதிபாவைத்தான் திருமணம் செய்து கொண்டான்) அவன் இன்று சொன்ன ஒரு விசயத்தை ஜீரணிக்க எனக்கு வெகுநேரம் ஆனது. அது நந்துவின் டெலிபதி சக்தி பற்றிதான். இல்லை இல்லை அரசுவின் டெலிபதி சக்தி பற்றி. அதாவது அரசு நந்துவுக்கு இருப்பதாக நம்பிக்கொண்டு இருந்த ஆனால் உண்மையாக இல்லாத டெலிபதி சக்தி பற்றி. நான் கொஞ்சம் குழப்புகிறேன் என்று நினைக்கிறேன். தெளிவாக சொன்னால் அரசு, நந்துவுக்கு இருப்பதாக சொன்ன அந்த அபூர்வ சக்தி உண்மையில் நந்துவுக்குக் கிடையாது அது அரசுக்குத் தான் இருக்கிறது. அதைத்தான் நாங்கள் தவறாக நந்துவின் சக்தி என்று புரிந்து கொண்டோம். எப்படி சொல்கிறேன் என்றால் அரசு முன்பு நந்துவுடன் நடத்திய டெலிபதியை இப்போது பிரதிபாவிடம் நடத்த முடிகிறதாம்.

No comments: