Monday, October 03, 2005

ஒரு ஹைபுன்

ஹைபுன் (haibun) என்பது ஒரு ஹைக்கூ அதைத்தொடர்புடைய (அதைப்பற்றிய விளக்கம் அல்ல) சிறு உரைநடையுடன் வருவது. நான் முன்பு குறிப்பிட்டிருந்த ஹைகூவை அது எனக்குத் தோன்றிய சூழ்நிலையுடன் சேர்த்து ஒரு ஹைபுன் வடிவத்தில் கொடுத்திருக்கிறேன்.

---

இன்றும் தாமதம் ஆகிவிட்டது. மணி பன்னிரண்டை தொட்டு விட்டது. தூக்கம் கண்களை மூடச் சொல்லி கெஞ்சின. ஆனால் கோடை கடைசியாக ஒருமுறை கம்பைல் செய்து பார்த்துவிட்டு க்லைன்ட்டுக்கு அனுப்பிவிட்டு தான் கிளம்ப முடியும. இன்று மட்டுமா ஒரு மாதமாக இதே கதைதான். காலையில் அவசர அவசரமாக எழுந்து, குளித்து, அயர்ன் செய்து வைத்த சட்டை பேன்ட்டுக்குள் நுழைந்து கொண்டு, வண்டியை ஸ்டாட் செய்து வெய்யில், வியர்வை, புகைக்கு நடுவே ட்டிராபிக்கில் பல சாகசங்கள் செய்து ஆஃபிஸ் வந்து சேரவேண்டும. அன்று செய்ய வேண்டிய வேலைப் பட்டியலில் இருந்து ஒவ்வொரு வேலையாக முடிக்க (நடிவில் பைசா பிரயோஜனம் இல்லாத மீட்டிங் வேறு) இரவு ஆகிவிடுகிறது. கிளம்பும் நேரத்தில் கிலைன்ட்டி டமிருந்து நல்ல சேதி வரும் – அனுப்பிய சாஃப்ட்வேரில் பழுது என்று. என்ன பிழை என்று கண்டு பிடித்து சரிசெய்து அனுப்ப இரவு ஆகிவிடுகிறது. வாழ்க்கையே இயந்திரத்தனமாக ஆகிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல சினிமா பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது ?
அக்கா பிறந்த நாள் பரிசாக அனுப்பிய அந்த கவிதைப் புத்தகம் – இன்னும் பிரித்து கூட பார்க்கவில்லை.

. . .
ஒருவழியாக இன்று வேலை முடிந்தது. வெளியே வந்து வண்டியை ஸ்டாட் செய்து கிளம்பினேன். தாமதமாக வீட்டுக்குப் போவதில் ஒரு சந்தோசம் – போக்குவரத்து நெரிசல் இருக்காது. வேகமாகக் கடந்து செல்லும் ஒன்றிரண்டு லாரிகளைத்தவிர இன்று வேறெதும் வாகனங்கள் இல்லை. என் வண்டியின் ஓசை தவிர சாலை நிசப்தமாக இருந்தது. பனிக்காற்றில் உடல் லேசாக நடுங்கியது. சட்டென்று ஒரு மழைத்துளி என் நெற்றியை முத்தமிட்டது. வண்டியை நிறுத்தலாமா என்று யோசிப்பதற்குள் மழை அதிகமாகி என் உடல் முழுவதும் நனைந்துவிட்டது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இந்த மழை கொஞ்சம் கவிதை கொண்டுவந்து சேர்ப்பது போல் இருந்தது. நான் வண்டியை நிறுத்துவதில்லை என்று முடிவுசெய்தேன்.

என் பைக் விளக்கின்
வட்ட வெளிச்சத்துக்குள்
அடர்ந்த மழை

No comments: