Thursday, September 29, 2005

மற்றும் ஒரு காதல் கதை

கடைசியாக காதல் படம் (original DVD வாடகைக்கு எடுத்து) பார்த்துவிட்டேன். இதைப்பற்றி நிறைய எழுதி விட்டார்கள். நான் கொஞ்சம் தாமதம்தான் என்றாலும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சில விசயங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு சாதாரண (ஏழை இளைஞனுக்கும் பணக்காரப் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும்) காதல் கதைப்போல தோன்றினாலும் அதை அணுகியிருக்கும் விதமும் படமாக்கியவிதமும் இதை மற்ற படங்களில் இருந்து வேறுபடுத்துகிறது.

அதிக பின்னணி இசை இல்லாமல், இயற்கையான ஒளிப்பதிவுடன் ஒரு ஆவணப்பட (documentary) சாயலில் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் இது புதிய முயற்சி. இந்த பாணி, கதை ஒரு உண்மை சம்பவம் என்ற உணர்வை நிலைப்படுத்த உதவுகிறது. பொருத்தமான பாத்திரத்தேர்வு (casting), இயல்பான பாத்திரப் படைப்பு, (ஒருசில இடங்களைத் தவிர) எதார்த்தமான நடிப்பு போன்றவையும் இந்த படத்திற்கு பலம்.

பல காட்சிகளை இயக்குனர் வித்தியாசமான கோணத்தில் அமைத்திருக்கிறார். கதாநாயகியின் பூப்பெய்தும் விழாவில் பொய்க்கால் மாட்டுக்காரன் ஆடுவதைக்காட்டுவதற்கு பதில் அவன் மாட்டின் வேசத்தில் தலையை மட்டும் கழற்றிகையில் வைத்துக்கொண்டு சிகரெட் பிடிப்பதைக்காட்டி இருப்பது ஒரு உதாரணம்.

கதாநாயகி அவள் காதலனுடன் ஓடிப்போகும் அன்று அவள் வீட்டில் 'காதலுக்கு மரியாதை' படத்தை உருக்கமாகப் பார்துக்கொண்டு இருப்பதுபோல ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சி "காதலை கதைகளிலும் படத்திலும் ஏற்றுக்கொள்ளும் மக்கள் நிஜ வாழ்க்கையில் வன்மையாக எதிர்க்கிறார்கள் (அந்த முரண்பாட்டின் உணர்வு சிறிது கூட இல்லாமல்)" என்பதைச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது தன்வீட்டுப்பெண் காதலனுடன் ஓடிப்போகும் அன்று காதலுக்கு மரியாதை பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையின் அபத்தத்தை கிண்டலாக வெளிப்படுத்தும் காட்சியாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது போல பல இடங்களில் சொல்லவந்த விசயத்தை நேரடியாக (வசனங்கள் வழியாக) சொல்லாமல் காட்சிகள் மூலம் குறிப்பாக சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் முழு படமுமே வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளன் கோணத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற படங்கள் தமிழில் வருவதும் அது வியாபார ரீதியாக வெற்றியடைவதும் ஆரோக்கியமான விசயம். காதல் திரைப்படம் இந்தவருட Oscar பரிந்துரைக்கு தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பதாகப் படித்தேன் ஆனால் அதோடு சேர்த்து சச்சின் திரைப்படமும் தேர்வில் இருப்பது எந்தவகையில் என்று புரியவில்லை.

Monday, September 26, 2005

A parable

I was browsing through the C news group and found these two interesting variants of the parable “Give a man a fish; you have fed him for today. Teach a man to fish; and you have fed him for a lifetime”

variant #1

Give a man a fish, and you've hooked a customer.
Teach a man to fish, and he'll open a competing fish market.

variant #2

Give a man a fire, and he's warm for today.
Set a man on fire, and he's warm for the rest of his life.


For those who wonder what this has got to do with C, this is the link clc. See where a simple question can lead to in a technical group.

PS: I visit these news groups for such interesting stuffs than for technical information :)

Thursday, September 08, 2005

மூன்று வரிகளில் ஒரு காட்சி

ஹைகூவிற்கு (haiku) அதிக அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். தமிழில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ஹைகூ எழுதப்படுவதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால் ஹைகூவை விட ஹைகூ என்ற பெயரில் வரும் ஹைகூ அல்லாத கவிதைகள் (பொய்கூ) தான் இங்கு அதிகம். அதைத்தான் “ஹைகூ என்பது மூன்று வரிப் பாவச்செயல்” என்று சுஜாதா ஒருமுறை கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஹைகூவிற்குப் போகும் முன் அதைப்பற்றி ஒரு சில வரிகளில் அறிமுகம்..

ஒரு காட்சியை (அல்லது நிகழ்வை) உவமை, உருவகம் போன்ற பொய்கள் இல்லாமல் நேரடியாக 12 அசைகளில் (5 – 7 – 5) எழுதும் ஜப்பானிய கவிதை வடிவம்.
இது பல மொழிகளில் அங்கீகரிக்கப்பட்டு பல மாற்றங்களை அடைந்துவிட்டது, இதன் விதிகள் தமிழில் இவ்வளவு கடுமையாகப் பின்பற்றப்படுவது இல்லை.

நான் சமீபத்தில் நெட்டில் படித்த ஆங்கில ஹைகூ ஒன்று

this small life
the beating of its heart
against my palm

தமிழ்ப்படுத்தினால்

எத்தனை சிறிய உயிர்
அதன் இதயத் துடிப்பு
என் உள்ளங்கைமீது

ஹைகூ என்பது மனம் என்னும் தெளிந்த நீர்ப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் என்று யாரோ குறிப்பிட்டிருந்தார்கள். கல் சிறியதுதான் ஆனால் அது மனதில் ஏற்படுத்தும் சலனங்களைப் பொறுத்துதான் அது நல்ல கவிதையா என்று தீர்மானிக்கப்படுகிறது.

மேலுள்ள ஹைகூவைப் படிக்கும் போது நம் உள்ளங்கையில் ஒரு சிறிய தவளையின் இதயம் துடிப்பதை உணரமுடிகிறது. அப்படித் துல்லியமாக கவிஞனின் அனுபவத்தை வாசகனுக்குக் கடத்தும் போதுதான் ஒரு ஹைகூ வெற்றியடைகிறது.

எனது ஹைகூ முயற்சியை கீழே கொடுத்திருக்கிறேன். இது 5-7-5 என்ற இலக்கணத்துக்குள் இருப்பதை கவனிக்க.

என் பைக் விளக்கின்
வட்ட வெளிச்சத்துக்குள்
அடர்ந்த மழை

Wednesday, September 07, 2005

சித்திரங்களின் உலகம்


சமீபதில் ஒரு புத்தகக்டையில் நின்று தீராநதி, உயிர்மை ஏதாவது வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த காமிக்ஸ் புத்தகத்தைப் பார்த்தேன். என்னுடய சிறிய வயது காமிக்ஸ் ஹீரோ கேப்டன் பிரின்ஸ் பொல ஒருவன் அட்டையில் இருந்ததனால் அதை கொடுக்கச் சொல்லி அந்த கடைப் பையனிடம் கேட்டேன். அவன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “சார் அது சின்னபசங்க படிக்கிற காமிக்ஸ் புத்தகம்” என்றான். அந்தக் கடைப பையன் போல இங்கு நிறையபேர் காமிஸ் என்பது சின்னபசங்க மட்டும் படிக்கக்கூடிய விசயம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் ஆனால் அதற்குப் பின்னால் எத்தனை பெரிய ஆட்களின் creativity, உழைப்பு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவது இல்லை. ஒருமுறை காமிக்ஸ் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி லயன் காமிக்ஸ்-ல் ஒரு தொடர் வந்தது (ஒரு சினிமா போல, கதை எழுத ஒருவர் அதை screenplay வாக மாற்ற ஒருவர், ஒரு ஓவியர் அதை மாதிரி வரைபடமாக (rough sketch) மாற்றி அதற்கு வசனகர்த்தா வசனம் எழுதி பின் அதிலிருந்து இறுதி படம் உருவாக்குவார் –– இறுதியாக ஸ்பெசல் எபக்ட் சிலசமயம் வண்ணங்கள் என்று அதைப்பற்றி நிறைய சொல்லலாம். ஒரே நேரத்தில் அதிக வசனம் வரவேண்டி இருந்தால் அதை எப்படி ஓவியர் பல கோணங்களில் இருந்து வரைந்து விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொள்வார் என்றெல்லாம் விளக்கி இருந்தது) அதைப் படித்த பிறகு காமிக்ஸ் மேல் எனக்கிருந்த ஈடுபாடு அதிகமாகிவிட்டது. அப்போது வந்த லயன் காமிஸ் ஹீரோக்களில் எனக்குப் பிடித்தவன் லக்கி லூக் (இந்த ஹீரோ பற்றி மற்றொரு சமயம் சொல்கிறேன்).

அதன் பிறகு கல்லூரி சேர்ந்து நேரம் அதிகம் கிடைக்காத காரணத்தால் காமிக்ஸ் படிக்கிற சந்தர்ப்பம் ஏற்படவில்லை. வேலை சேர்ந்தபிறகு எனக்கு asterix காமிக்ஸ் அறிமுகமாகி பிடித்துப்போனது. மற்ற நிறைய ஆங்கில காமிக்ஸ் இருந்தாலும் asterix தான் என்னுடைய favourite. சமீபத்தில் ஒருநாள் தான் கவனித்தேன் asterix ன் கதாசிரியர் Rene Goscinny தான் luky luke கின் கதாசிரியரும் என்கிற உண்மயை. இந்த ஒற்றுமை தற்செயலானதாக எனக்குப் படவில்லை.

கிருகப்பிரவேசம்

இது என் வீட்டின் web சாளரம். இதன் வழியாக என் புத்தக அறையும் அதில் உள்ள, நான் படித்த, படிக்க விருக்கும் புத்தகங்களும் தென்படலாம். அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்க நேரலாம். என் வீட்டிற்கு வரும் நண்பர்களுடன் நிகழும் சம்பாசனைகள் சிலசமயம் உங்கள் காதில் விழலாம்.