இதுதான் காதல் என்பதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாரிவன்? மேலே மோதிவிட்டு முகத்தைக்கூட பார்க்காமல் சாரி சொல்லிவிட்டு இவ்வளவு வேகமாக கடந்து போகிறான். சாயம் போன ஜீன்ஸ், சரியாக இன் செய்யாத அலட்சியமான டீசர்ட், தடிமனான லெதர் ஷூ. ம்ம்...ஏதோ ஒன்று அவனை மீண்டும் பார்க்கச் சொல்லி தூண்டியது. முன் நெற்றியில் வழியும் கலைந்துபோன கேசமா? அதற்குப் பின்னால் இருக்கும் அந்த குறும்புத்தனம் நிறைந்த கண்களா? தெரியவில்லை. சற்று அதிக நேரம் அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதாகப் பட்டது. சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தேன். இதற்கு முன் அவனை இங்கு பார்த்ததில்லை. உடனே அவன் பெயரை தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. எந்த டிவிஷனில் இருக்கிறான் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.
நான் இப்படியெல்லாம் யோசிப்பதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி இருந்த பெண் நான். இந்த கம்பெனி சேர்ந்த புதிதில் ஆண்கள் இருக்கும் பக்கம் கூட போக கூச்சப்படுவேன். இப்பொழுதுதான் ஆண்களோடு கொஞ்சம் பேச ஆரம்பித்திருக்கிறேன் அதுவும் வேலை சம்பந்தமாக மட்டும்தான். இவனைப்பற்றி தெரிந்துகொள்ள ஏன் இப்படித் துடிக்கிறேன்? தெரியவில்லை. இவனைப்பற்றி யாரைக்கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே லதா எதிரில் வந்தாள். இதற்கெல்லாம் இவள் தான் சரியான ஆள். இங்கு இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் (குறிப்பாக ஆண்கள்) குலம் கோத்திரம் முதற்கொண்டு தெரிந்து வைத்திருப்பாள்.
"ஏய், இங்க நின்னுக்கிட்டு என்னமா பண்ணிகிட்டு இருக்க? இன்னைக்கு CMM ட்ரெய்னிங் அடென்ட் பண்ணலையா?" என்றாள்
"இல்லடீ, ட்ரெய்னிங் அடென்ட் பண்ணதான் போய்க்கிட்டிருந்தேன் ..."
"போய்கிட்டுருந்த ...?"
"இல்ல... ஒருந்தன் மேல வந்து மோதிவிட்டு அவன் பாட்டுக்கு போய்கிட்டிருக்கான். உனக்கு அவனைத் தெரியுமா?"
"யாரை சொல்ற?...." சுற்றும் முற்றும் பார்த்தாள் "ஒரு நிமிசம் இரு, நீ எப்ப இருந்து பசங்களை சைட் அடிக்க ஆரம்பிச்ச?"
கேள்வியின் தவறு புரிந்தது. நாக்கை கடித்துக்கொண்டேன். "சேச்சே, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. இப்படிப்பட்ட ஜந்துக்கள் எல்லாம் நம்ம கப்பெனியில் இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்."
"ஓ.. அதுதானே பார்த்தேன். சரி அவன் யாருன்னு அப்பறம் கண்டு பிடிச்சுக்கலாம். இப்ப ட்ரெய்னிங் ஆரம்பிச்சுடுவாங்க வா நாம போகலாம்"
அவள் பின்னால் சென்றேன். ட்ரெய்னிங் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. 'எக்ஸ்க்யூஸ் மீ' சொல்லிவிட்டு உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். எவளோ ஒருத்தி ஸ்லைட் ஷோ முன் நின்று கொண்டு க்வாலிடியின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள். என்னால் அதிகநேரம் கவனிக்க முடியவில்லை. காலையில் பார்த்தவன் முகம் மீண்டும் நினைவுக்கு வந்தது. அவன் என்மீதுவந்து மோதியது ஆக்ஷன் ரீப்லேயில் ஓடியது. அதில் அவன் என்னைப்பார்த்து சிரித்தான். என் கண்களைப்பார்த்து சாரி சொன்னான். என்னிடம் கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். தான் சந்தித்ததிலேயே மிகவும் அழகான பெண் நான்தான் என்று அழகான ஆங்கிலத்தில் சொன்னான்.
'என்ன ஆயிற்று எனக்கு ஏன் இப்படி அவனையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்?' அவன் நினைவைத்துரத்தும் விதமாக தலையை உலுக்கிக்கொண்டேன்.
-o0o-
அவனைப்பார்த்து இரண்டு நாட்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட அவனை மறந்துபோயிருந்தேன். இப்போது மறுபடியும் அவன். என் மேனேஜரோடு பேசிக்கொண்டே என் க்யூபிகல் நோக்கிதான் நடந்து வருகிறான். கடவுளே.. இதுதான் விதி என்பதா? அவனை கவனிக்காதவள் போல் வேலையில் மும்முரமானேன். அவன் வந்ததும் எப்படி வரவேற்பது என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்தேன். முதலில் மேனேஜர்தான் என்னை அழைத்தார். அவன் இந்த கம்பெனிக்கு புதிதாக சேர்ந்திருப்பதாகவும் அவன் எங்கள் டீமில் தான் வேலைசெய்யப்போவதாகவும் சொன்னார். சிலநாட்களுக்கு அவனுக்கு வேலையைப்பற்றி சொல்லிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவன் தன் பெயர் ராஜீவ் என்று சொன்னான் இயல்பாக கை குழுக்கினான். என்னை இனிமேல் அடிக்கடி தொந்தரவு செய்யப்போவதாக சொல்லிவிட்டு சிரித்தான், பின் சென்றுவிட்டான். அவன் சென்றபிறகுதான் நான் ஒழுங்காக சிரித்தேனா? ஒழுங்காக கைகுழுக்கினேனா? என்றெல்லாம் யோசித்தேன், ஆனால் ஒன்றும் சரியாக நினைவில் இல்லை.
'ராஜீவ்' அவன் பெயரை மனதுக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டேன். 'இனிமேல் என்னோடுதான் வேலை செய்யப்போகிறாய்'. இப்படி யோசிக்கும் போதே என்னவோ செய்தது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் என்பார்களே இதுதானா அது? ஆனால் ஒருபுறம் நான் கொஞ்சம் அலைகிறேனோ என்று தோன்றியது. மனதை அமைதியாக இருக்கும்படி அதட்டினேன்.
-o0o-
இன்றோடு அவன் சேர்ந்து ஒருவாரம் ஆகிறது. தினமும் காலையில் முதல் வேலையாக அவன் எனக்கு குட்மார்னிங் சொல்லிவிட்டுதான் செல்வான். அவனுடன் பேசும்போது முன்பிருந்த பதற்றம் இப்போது இல்லை. நேற்று பார்த்த சினிமாவிலிருந்து வீட்டு விசயங்கள் வரை எல்லாவற்றையும் பேச ஆரம்பித்து விட்டேன். அவனோடு ஒருவாரம் பழகியதில் அவனைப்பற்றி தெரிந்துகொண்ட விசயங்கள் சில.
அவனுக்கு ஃபுட்பால் என்றால் உயிர். எந்தெந்த டீமில் யார் யார் இருக்கிறார்கள் என்பது முதற்கொண்டு எந்த வருடம் யார் ஜெயித்தார்கள் எங்கிருந்து கோல் போட்டார்கள் என்பதுவரை அத்துபடி.
அவனுக்குப் பிடித்த மற்றொரு விசயம் பைக் ஓட்டுவது. நிறைய பணம் சம்பாதித்ததும் யமாஹா 500 cc வண்டி ஒன்றை வெளிநாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்பது அவனுடைய நீண்ட நாள் லட்சியங்களில் ஒன்று.
அவனைப்பற்றி சொல்ல வேண்டிய மற்றொரு விசயம் அவனுடைய சென்ஸ் ஆஃப் ஹுமர். எதற்கெடுத்தாலும் ஒரு புன்னகை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு ஜோக் அடித்து விடுவான். அவற்றில் சில ரசிக்கும் படியாகவும் இருக்கும்.
-o0o-
இப்பொழுதெல்லம் லதாவை விட ராஜீவோடுதான் அதிக நேரம் செலவிடுகிறேனாம். அவன் என்னுடைய 'ஆள்' என்று லதா என்னை கிண்டல் செய்கிறாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என்று சொன்னாலும் மனதுக்குள் அந்த கிண்டலை ரசிக்கவே செய்கிறேன். எங்கள் டீமில் எல்லோரையும் விட அதிகமாக என்னோடுதான் பேசுகிறான் என்பதில் எனக்கு சற்று கர்வமாக கூட இருந்தது. அவன் ஒரு நாள் வராவிட்டாலும் கம்பெனியே வெறிச்சோடி இருப்பது போல் தொன்றும். அவன் என்னை வெறும் நண்பியாகத்தான் நினைக்கிறானா அல்லது அதற்குமேல் ஏதாவது உண்டா என்று தெரிந்துகொள்ளும் ஆவல் இருந்தது. ஆனால் அவன் பழகுவதிலிருந்து அதை சரியாக யூகிக்க முடியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.
-o0o-
சில நாட்களாக அவன் போக்கே புரியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து என்னோடு போசாமல் இருக்கிறான். நானே பேசப்போனாலும் வேலை இருப்பதாகச் சொல்லி என்னை வேண்டுமென்றே தவிர்க்கிறான். நான் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தேன். ஏதேனும் தவறாக சொல்லிவிட்டேனா? யாராவது என்னைப்பற்றி தவறாக சொன்னார்காளா? என்று ஏதேதோ எண்ணி குழப்பிக்கொண்டதுதான் மிச்சம்.
ஒரு நாள் திடீர் என்று அவனாக என்னிடம் வந்து "நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்.
என் ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு உணர்ச்சி இல்லாத பாவனையில் "சொல்லு ராஜீவ் என்ன விசயம்?" என்றேன்.
"இல்லை கொஞ்சம் பர்ஸ்னலான விசயம். கேஃபடீரியா போலாமா?" என்றான். அவன் சற்று படபடப்பாக இருப்பதை கவனித்தேன்.
எனக்கு அவன் எதைப்பற்றி பேசப்போகிறான் என்று கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. என் ஆர்வத்தை வெளிக்கட்டாமல் "சரி" என்றேன் இயல்பாக.
ஆளுக்கு ஒரு கப்பில் காபி எடுத்துக்கொண்டு தனியாக இருக்கும் டேபிள் தேடி அமர்ந்தோம். அவன் பேச ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை. காபியையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான். இவன் இப்படித் தயங்கி நான் பார்த்ததில்லை.
"ஏதோ சொல்லவேண்டும் என்றாயே ..?" என்று நானே ஆரம்பித்தேன்.
"ம்... வந்து ... நான் இப்ப சொல்லப்போவதைக்கேட்டு கோபப்படக்கூடாது. நம்மோட ப்ரெண்ட்சிப்புக்கு இதனால எந்த பாதிப்பும் இருக்காதுன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணுவியா?"
கடவுளே... இவன் என்ன சொல்ல வருகிறான். இங்கு நடப்பது கனவா என்று ஒருகணம் யோசித்தேன். இல்லை என்று ஊர்ஜிதமானதும் "சரி" என்றேன்.
"வந்து ... இதை எப்படி சொல்றதுன்னு தெரியலை. எனக்கு உன்னை... உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னுடைய அறிவு, உன்னுடைய சென்ஸ் ஆஃப் ஹூமர், கான்ஃபிடன்ஸ், உன்னுடைய .... உன்னுடைய அழகு... எல்லாமே. இதை உன்கிட்ட சொல்றதுக்கு முன்ன ரொம்ப யோசிச்சேன். உன் கூட பேசாம இருக்க கூட நான் எவ்வளவோ ட்ரை பண்ணினேன் ஆனால் என்னால முடியலை. நான் ... நான் உன்னை காதலிக்கிறேன்னு நினைகிறேன். என்னொட வாழ்க்கைப் பயணத்துல நீ கடைசிவரைக்கும் வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் அதை நேரடியா சொல்லலாம்"
அப்போது எனக்கு இருந்த மனநிலையை என்னாலே விளக்க முடியவில்லை. அது சந்தோஷமா துக்கமா என்று தெரியவில்லை. அந்தரத்தில் பறப்பது போல் அல்லது ஒரு மலை உச்சியில் நான்மட்டும் தனியாக நிற்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை குழப்பமாக இருந்தது. ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு "எனக்கு கொஞ்சம் டைம் வேணும்" என்றேன்.
-o0o-
அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. அவன் சொன்ன வார்தைகளை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்துக்கொண்டேன். அதில் ஒரு ரகசிய சந்தோஷம் இருந்தது. ஆனால் அவனுக்கு என்ன பதில் சொல்வது? நான் அவனை காதலிக்கிறேனா? அவன் எனக்கு வெறும் நண்பன் மட்டும் தானே என்று தொன்றியது. அவனை ஒரு நாள் பார்க்காவிட்டாலும் மனது அடித்துக்கொள்வது என்னவோ உண்மைதான். ஆனால் அதை காதல் என்று சொல்லத்தோன்ற வில்லை. அப்படியே நான் காதலிப்பதாக இருந்தாலும் எதைப்பார்த்து காதலிப்பது? அவன் அழகைப்பார்த்தா? அவன் அப்படி ஒன்றும் அழகு என்று சொல்லிவிட முடியாது. சராசரிதான். நல்ல சர்ட் பேன்ட் அணிந்து வந்தால் நன்றாக இருப்பான். எக்சசைஸ் செய்து இன்னும் கொஞ்சம் ட்ரிம்மாக இருந்தால் தேவலை என்று தோன்றும். சரி அவன் அறிவு, திறமை பார்த்து காதலிக்கலாமா? அப்படி ஒன்றும் திறமையானவன் என்று சொல்வதற்கில்லை. வேலையில் சேர்ந்து ஆறு மாதம் ஆகிறது, இன்னும் ஏதாவது சந்தேகம் என்று என்னைத்தான் தேடி வருகிறான். என்னை விட ஒருபடி உயர்வான ஒருவனைத்தான் என்னால் காதலிக்க முடியும் என்று நினைக்கிறேன். எப்படியும் யாரையாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் அது இவனாக இருந்தால் என்ன? ஆனால் இந்த காதல் விசயத்தை வீட்டில் ஒப்புக்கொள்ள வேண்டுமே? இவனுக்காக அப்பா அம்மாவோடு சண்டை போட வேண்டுமா?
இப்படி எல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டேன். கனவில் அவன் வந்தான். இளவரசன் போல் உடை அணிந்து குதிரையில் வந்து இறங்கினான். என் முன் மண்டியிட்டு என் கையைப்பிடித்து என்னை காதலிப்பதாகச் சொன்னான். நான் ஒப்புக்கொள்ளாவிட்டால் தன் உடை வாளால் குத்திக்கொண்டு இறந்து விடுவேன் என்றான். நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன்.
-o0o-
மறுநாள். அதே கேஃபடீரியா. அதே டேபிள். அதே மௌனம். அவன் கண்கள் சிவந்திருந்தன. அவனும் நேற்று தூங்கவில்லை போல் இருந்தான். நானே முதலில் பேச ஆரம்பித்தேன்.
"ராஜீவ். நான் ஒரு ப்ரெண்டாதான் உன்னோடு பழகினேன். உன் மனசில அந்த மாதிரி ஒரு எண்ணம் வர நான் எந்த விதத்திலாவது காரணமா இருந்தா என்னை மன்னிச்சிடு. நீ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நாம பழையபடி நண்பர்களாவே இருப்போம். சரியா?"
அவன் பதில் சொல்ல சிறிது நேரம் பிடித்தது. அழுகையைக் கட்டுப்படுதிக்கொள்பவன் போல் தோன்றினான். சிரிக்க முயற்சித்தான் ஆனால் அவன் உதடுகள் ஒத்துழைக்க மறுத்தன "சரி பழையபடி நண்பர்களாகவே இருப்போம்" என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.
நான் காபி கப்போடு வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன். எங்களால் பழையபடி இனிமேல் எப்போதும் இருக்க முடியாது என்று தோன்றியது.
~~~~~~~o0o~~~~~~~
No comments:
Post a Comment