மறுப்பு [நாடகம்]
காட்சி 1: பாட்சுலர் அறை. சுவரில் டெண்டுல்கர் போஸ்டர். ஹேங்கரில் ஒழுங்கில்லாமல் தொங்கும் துணி.
[நந்து ட்ராவலிங் பேகில் துணிகளை எடுத்து திணித்துக்கொண்டிருக்கிறான்]
ராஜீவ்: [உள்ளே நுழைந்தபடி] என்னடா ஊருக்கு கிளம்பிடியா?
நந்து: ஆமாம். அம்மா திடீன்னு போன்பண்ணி ஊருக்கு வர சொல்லிட்டாங்க.
ராஜீவ்: என்ன விசயம்?
நந்து: [சோகமாக] ம்... பொண்ணு பாக்க.
ராஜீவ்: ஹேய் ... கலக்கு மச்சான்
நந்து: அட போடா.. பொண்ண பிடிக்கலைன்னு சொல்லப் போறேன்.
ராஜீவ்: ஏன்டா? என்ன ஆச்சு? கல்யாணம் பண்றதா ஐடியாவே இல்லையா?
நந்து: கல்யாணம் எல்லாம் உண்டு ஆனா அது இப்படி இல்ல. என்னோட ப்ரீக்வன்சி மாட்ச் ஆகற மாதிரி ஒரு பொண்ண நான் எங்கேயாவது சந்திக்கணும், எனக்கு அவள்மேல கழுத்துவரைக்கும் காதல் வரணும், அப்பறம் அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணி அப்பறம் தான் கல்யாணம்.
ராஜீவ்: ஏன்? உங்க வீட்டில பாக்கற பொண்ணு கூட உனக்கு ஃப்ரீக்வன்சி மேட்ச் ஆகலாம் இல்ல?
நந்து: வீட்டில பாக்கற பொண்ணா? [கிண்டலான தோணியில்] எப்படி.. ஒரு பத்து பதினைந்து பெரியவங்களை கூட்டிகிட்டு. கும்பலா பொண்ணு வீட்டுக்குப் போயி. ஸ்வீட் காரம் எல்லாம் சாப்பிட்டுட்டு. அப்பறம் .. மடிப்பு கலையாத புடவை, நிறைய மேக்கப், குனிஞ்ச தலையோட அந்த பொண்ணு வந்து காஃபி கொடுக்கும். அவளைப் பாத்து வழிஞ்சிட்டு... இதுக்கு நடுவில நான் எங்க அந்த பொண்ணோட பேசறது? அப்படியே பேசினாலும் எங்களால எவ்வளவு ஃப்ரியா பேசமுடியும்?
அது மட்டும் இல்லடா. இப்படி 'அப்பா அம்மா பார்த்து யாரை சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்' அப்படீன்னு இருக்கிற பொண்ணு எனக்கு ஒத்துவராது. தன்னோட வாழ்க்கையோட முக்கியமான முடிவுகளை தானா எடுக்கிறவளா இருக்கணும். இப்படி முன்னபின்ன தெரியாத ஆட்கள் வந்து பப்லிக்க தன்னை சைட் அடிக்கிறத சுயமரியாதை உள்ள எந்த பொண்ணும் அனுமதிக்க மாட்டா. அப்படிப் பட்ட ஒரு பொண்ணுதான் எனக்கு வேணும்.
ராஜீவ்: சரி.. இவ்வளவு பேசுறயே, உன்னோட ஆஃபிஸ்ல எத்தனை பொண்ணுங்க இருக்காங்க? உன்னொட ஃப்ரெண்ட்சே எத்தனை போர் இருக்காங்க. அங்க ஒரு அப்ளிகேசன் போட்டு வைக்க வேண்டியதுதான?
நந்து: நான் தான் சொன்னேன் இல்ல. என்னோட ஃப்ரீக்வன்சி மாட்ச் ஆகிற மாதிரி ஒரு பெண்ணை நான் இன்னும் சந்திக்கல. நான் எதிர் பார்கிற பொண்ணு [சற்று மேலே பார்த்து கனவு காணும் தோரணையில்] பெரிய லட்சியத்தோட இருக்கவளா, வாழ்க்கைய பாசிடிவா அப்ரோச் பண்றவளா இருக்கணும். க்வாண்டம் மெக்கானிக்ஸ் பத்தி, ஸெல்லி யோட கவிதைய பத்தி, உலக சினிமாவப்பத்தி பேசரவளா இருக்கணும்.
ராஜீவ்: [நந்துவின் தோளைப் பிடித்து உலுக்குகிறான்] சரி சரி.. பகல் கனவு கண்டது போதும். பஸ்க்கு டைம் ஆச்சு. நான் வந்து ட்ராப் பண்ணவா?
நந்து: [சுய நினைவுக்கு வந்தவனாக] ஆமா அமா.. [பேகை அவசரமாக முடி தோளில் மாட்டிகிக்கொள்கிறான்]
-o0o-
காட்சி 2 : நந்துவின் வீடு. நந்துவின் அம்மாவும் அப்பாவும் வெளியே கிளம்பும் அவசரத்தில். நந்து கண்ணாடியைப் பார்த்து தலைசீவிக்கொண்டு
நந்து: அம்மா இப்பவே சொல்லிடேன். பொண்ண பிடிக்கலைன்னு தான் சொல்லப்போறேன். பின்னாடி அதுவும் இதுவும் சொல்லக் கூடாது.
அம்மா: ஏன்டா பாக்காமலே பிடிக்கலைன்னு சொல்ற?
நந்து: என்கிட்ட கேட்காம அவங்ககிட்ட வர்றோம்னு சொன்னது முதல் தப்பு. ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேன் இந்த பொண்ணு பார்கிற பிஸ்னஸ் எல்லாம் வேண்டாம்னு.
அம்மா: அப்படியெல்லாம் சொல்லாதடா. ரொம்ப நல்ல குடும்பம். அந்த பொண்ணு நிறைய படிச்சிருக்கா. உனக்கு கண்டிப்பா பிடிக்கும். சரி முதல்ல வந்து பாரு அப்பறம் பேசிக்கலாம்.
[நந்து ஒரு பெருமூச்சோடு என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணாடியிலிருந்து திரும்பி அம்மாவைப் பார்கிறான்]
-o0o-
காட்சி 3 : பெண்ணின் வீட்டு வரவேற்பறை. சோபாவில் நடுவில் நந்து. அருகில் அம்மா அப்பா. எதிரில் பெண்னின் அப்பா. பெண்ணின் அம்மா கதவருகில் நின்று கொண்டு. அவர்கள் தவிர சில சொந்த பந்தங்கள். டீபாயில் ஸ்வீட், காரம், சில காஃபி டம்லர்கள்
[நந்துவைச் சுற்றி சம்பிரதாயமான சம்பாசனைகள் தெளிவாக இல்லாமல் குறைந்த வால்யுமில் கேட்கிறது]
நந்து: [மனதுக்குள்] ச்சே ... எப்படி எல்லாம் இது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனொ அப்படியே நடக்குது. சரி என்ன இப்ப? வீட்டுக்கு போய் போனில் முடிவு சொல்றோம்ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க. ஆனால் அந்த பெண் இதை எப்படி எடுத்துக்கொள்வாளோ தெரியலையே? அதனால அந்த பெண்ணை நேரில் பார்த்து நானே சொல்லிவிடுவதுதான் நாகரீகம். [கிசு கிசுப்பான குரலில் அம்மாவிடம்] அம்மா..அந்த பொண்ணோட தனியா பேசணும்.
-o0o-
காட்சி 4: டைனிங் ஹால். இங்கிருந்து பார்த்தால் வரவேற்பறை தெரிகிறது. ஆனால் பேசுவது கேட்காது. நந்து ஒரு சேரில் அமர்ந்திருக்கிறான். அந்த பெண் சற்று தள்ளி நின்றுகொண்டு.
நந்து: [மனதுக்குள்] எப்படி ஆரம்பிப்பது ? ச்சே ... இவள் பேரைக்கூட கேட்டு வைத்துக்கொள்ள வில்லையே?
பெண்: நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும்
நந்து: [சற்று ஆச்சர்யத்தோடு நிமிர்ந்து பார்கிறான்] சொல்லுங்க
பெண்: சாரி.. உங்க பேரைக் கூட கேட்டு வச்சுக்க மறந்துடேன். ஆனா அது இப்ப முக்கியம் இல்லை. நான் இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு ஏற்கனவே எங்க அப்பாகிட்ட சொல்லிட்டேன். நீங்க தப்பா நினைச்சுகாதீங்க. எனக்கு இந்த மாதிரி கும்பலா வந்து ஏதோ வியாபாரம் பண்ற மாதிரி பெண்பார்க்க வரது பிடிக்கலை. என்கிட்ட கேட்காமலேயே உங்க வீட்டில் வர சொல்லிட்டாங்க. அதனாலதான் நான் இதுக்கு கூட ஒத்துகிட்டேன்.
[நந்து முகதில் ஆச்சர்யமும் குழப்பமும்]
பெண்: எனக்கு பொதுவா இந்த அரேஞ்ட் மேரேஜில் நம்பிக்கை இல்லை. எனக்கு பிடிச்ச ஒருத்தரை நானே சந்திச்சு அவரோடு ஃப்ரெண்டா பழகி, அவரைப்பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டு , அவர்மேல காதல் வந்து அப்பறம் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருகிறேன். எனக்கு சில லட்சியங்கள் இருக்கு. எனக்கு கணவரா வரவர் அதையெல்லம் புரிஞ்சுகிட்டு அதுக்கு சப்போர்ட் பண்றவரா இருக்கணும். என்னைப்பத்தி கவிதை எழுதணும்.. உலக இலக்கியத்த பத்தி என்னோட விவாதிக்கணும். இதுமாதிரி எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. நீங்க பெண்பார்க்க வந்த விதத்திலிருந்தே எனக்கும் உங்களுக்கும் ஒத்துவராதுன்னு தெரிஞ்சிடுச்சு. அதனால என்னை மன்னிச்சுடுங்க. உங்களுக்கு ஏத்த வேற வாழ்க்கைத் துணை அமைய என் வாழ்த்துக்கள்.
நந்து: [ஏதோ சொல்லவந்து சொல்ல முடியாமல்] நான்... வந்து ... சரி. பரவாயில்லை... ஆனா...
-o0o-